புதுடில்லி: குஜராத் முதல்வரும், பா.ஜ., வேட்பாளருமான மோடியின் நெருங்கிய நபரான அமித்ஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய, அவரின் பழிவாங்கும் பேச்சு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனக்கு முன் ஜாமின் கேட்டு அலகாபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த அமித்ஷா. இவர் மீது போலி என்கவுன்டர் வழக்கு, ஒரு பெண்ணை நோட்டமிட காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் தற்போது அத்வானி மற்றும் மோடி ஆகியோரது தொகுதிகளில், தேர்தல் பணிகளை கண்காணிக்க பணிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில், வரவிருக்கும் தேர்தல் நமக்கு இடையூறு செய்தவர்களை பழிவாங்கும் தேர்தல் என்பதோடு பா.ஜ.,வுக்கு வெற்றியாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த பேச்சு குறித்து தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் தம்மை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட் ஷாவின் பேச்சு அடங்கிய 'வீடியோ சிடி'யை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.

இதற்கிடையில் டில்லியில் ஆம்ஆத்மி வேட்பாளரான அசுதோஷ் என்பவர் மீதான விதிமீறல் புகார் தொடர்பாகவும் விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
Top