கதை

தார்ப்பாய் முருகன் என்ற ஹைவே கொள்ளைக்காரனின் வாழ்க்கையும் காதலும் தான் கதை.


கிட்டதட்ட பருத்திவீரனுக்கு தூரத்து சொந்தம் போன்ற ஒரு கதையம்சம். ஆனால் படத்தை வித்தியாசப்படுத்தியிருப்பது  நெடுஞ்சாலையை மையமாய் கொண்டு மிரட்டியிருப்பதும், சில கதாபாத்திரங்களின் படைப்பிலும், நடிப்பிலும் காட்டியிருக்கும் நுணுக்கங்களும்.

கதாபாத்திரங்கள் & நடிப்பு

தார்ப்பாய் முருகன் (ஆரி):  ஆரி என்ற ஒருவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகனாய் நடித்திருந்தாலும் அப்படி ஒரு நடிகன் இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது.  ஆனால் இனி அந்த நிலைமை இருக்காது என்ற வகையில் அவரை ஒரு அருமையான நடிகனாக்கியிருக்கிறது இந்தப் படம்.

வாழ்த்துக்கள் ஆரிக்கு. சபாஷ் இயக்குநர் கிருஷ்ணாவுக்கு. தார்ப்பாய் முருகன் என்ற ஒரு சாலஞ்சான ரோலுக்கேற்ப தன்னையும், தன் உடல் மொழியையும் மாற்றிக்கொண்டு ஜமாய்த்திருக்கிறார்.
மங்கா (ஸ்வதா நாயர்):
தமிழ் கதாநாயகிகளுக்கு எப்போதாவது நடக்கும் அற்புதம் ஒரு முழுமையான கதாயாத்திரத்தில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு.
இந்தப் பெண்ணிற்கு அது முதல் படித்திலையே கிடைத்திருக்கிறது. அதை மிகச்சரியாய் பயன்படுத்தி எல்லா இடங்களிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் இந்த மங்காவாய் மயக்கும் ஸ்வதா.
ஒரு அழகான மலையாளப் பெண் என்றதும் ஒடத்துவங்கும் நம் கற்பணைக்குதிரையில் லாவகமாய் ஏறி தடதடக்க பறக்கிறார்.
அழகும் அட்டகாசமான நடிப்பும் கலந்த இன்னொரு இனிய இறக்குமதி இவர். மங்கா என்ற அருமையான கதாபாத்திரத்தில் இயல்பாய் பொருந்தியிருக்கிறார்.
மாசனமுத்து (பிரசாந்த் நாராயணன்):
படத்தில் நம்மை நிமிர வைக்கும் மனிதர் இவர்தான். ஸ்டைலான வில்லன்களில் இவர் லேட்டஸ்ட். இவர் காட்டும் குரூரங்கள்தான் படத்தில் முழுகெழும்பு.
அதை உணர்ந்து இவருக்கு சரியாய் தீனி போட்டு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.
சலீம் குமார்:
மலையாள நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கொச்சின் ஹனிபா. மகாந்தியில் கமல் ஆர்பரித்து கலக்கிய நடிப்பை இவர் அலுங்காமல் குடுத்திருப்பார். கூடவே இருந்து குழிபறிக்கும் பச்சைத்துரோகத்திற்கு இலக்கணம் இவரது நடிப்புதான். அவரின் மறைவு தமிழ்-மலையாள திரையுலகிற்கு பேரிழப்பு. அந்த இடத்தை ஈடுகட்டியிருக்கிறார் இன்னொரு அட்டகாசமான மலையாள நடிகர் சலீம் குமார்.
இவரது கதாபாத்திரம் மிக நேர்த்தியாய் படைக்கப்பட்டிருக்கிறது. காசுக்காக என்ன வேணாலும் செய்வேன் என்பதில் எந்தவித தயக்கமுல் இல்லாத,
கடைசி வரை இவர் யாருக்கு நண்பன், யாருக்கு துரோகி என்பதை கண்டே பிடிக்கமுடியாத நுணுக்கமான காரக்டரில் ரொம்ப இயல்பாய் வாழ்ந்திருக்கிறார் சலீம் குமார்.

புரோட்டா மாஸ்டர்(தம்பி ராமையா):
தம்பி ராமையாவுக்கு இது கொஞ்சம் சுமாரான சாதாரண ரோல்தான் என்றாலும், பிரச்சினை என்று வரும்போது மங்காவுடன் கூடவே நின்று மல்லுக்கட்டும் நன்றியில் நெஞ்சில் இடம்பிடிக்கும் காரக்டர்.4

திரைக்கதை
ஒரு வித்தியாசமான களம், நல்ல கதாபாத்திரங்கள் என ஆரோக்யமாய் புறப்பட்ட இயக்குநர் திரைக்கதையில் தான் கொஞ்சம் சோம்பலாகிவிட்டார்.
இல்லையேல் இது இன்னும் பிரம்மாதமான ஆக்சன் திரில்லராய் வந்திருக்கலாம். முன்பாதியில் கதைக்களம், கதாபாத்திரங்கள், காதல், மோதல்
என பிஸியாய் இருந்த திரைக்கதை பின்பாதியில் நெளிவு சுழிவு இல்லாத நெடுஞ்சாலையாய் நீண்டுகொண்டே செல்வது குறை.
முடிவு வலிந்து திணிக்கப்பட்ட சோகமாய் இருக்கிறது. ஆனாலும் வழக்கமான இடங்கள் இல்லாமல் ஒரு நெடுஞ்சாலையை ஒட்டிய வாழ்க்கை
என்பதால் வழக்கமான வழவழப்பில்லாமல் கொஞ்சம் வித்தியாசமான பயணமாகவே செல்கிறது.

ஒளிப்பதிவு
படத்தின் ஆகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர்தான்.
அந்த ஓடும் லாரியில் கொள்ளையடிக்கும் சம்பவத்தை படபடப்பாய், அந்த சாலையோர இருட்டை இயல்பாய் கலந்து பயமுறுத்தி,
ப்ளாஸ்பேக் காட்சிகள் எல்லா ஷாட்களிலும் ஓளி கசிந்து அதுவே ஒரு மொழியாகி என பல நுணுக்கங்களில் ஆச்சர்யப்படுத்துகிறார்.
படத்தின் ரிச்னெஸ் என்பது முழுக்க முழுக்க இவரது கைவண்ணமே.

இயக்கம்
சில்லுனு ஒரு காதலில் கொஞ்சம் சூடுபட்ட இயக்குநர் கிருஷ்ணா இதில் வழக்கத்திற்கு மாறான களம், காரக்டர்கள் என நல்ல ஓட்டமெடுத்திருக்கிறார்.
திரைக்கதையின் சில பல சொதப்பல்களையும் தாண்டி இந்தப் படம் பார்க்கலாம் என்ற வார்த்தையை வரவழைப்பதில் இயக்குநர் பாஸாகிவிடுகிறார்.
இதை எடுத்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் இது போன்ற பல நல்ல முயற்சிகளை தொடர்ந்து கவனித்து சரியான நேரத்தில் வேண்டிய ஊக்கமளிக்கிறார்.
அவருக்கு ஒரு சிறப்பு பூங்கொத்து.
 
Top