தனி இசை ஆல்பம் என்றாலே அது ஆங்கிலப்பாடல்களுக்குத் தான் இன்றுவரை பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இருந்தாலும் இந்தியாவில் ஹிந்தியில் சில ஆல்பங்கள் அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றன.


தமிழிலும் கூட  ஹிப்ஹாப் தமிழன் உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் தனி இசை ஆல்பங்கள் வரவேற்பைப் பெறுகின்றன. இருந்தாலும் அதில் மீது உள்ள காதல் இன்னும் தீரவில்லை தான்.

நல்ல இசையை கேட்பதற்காக துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க வந்திருப்பது தான் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற தமிழ் இசை ஆல்பம்.

தயா சைரஸ் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தை எஸ்.மகேஷ் தயாரித்து, டைரக்ட் செய்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, போபோ சசி ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் பாடல்களில் தோன்றி பாடி நடித்திருக்கிறார்கள்.

‘நமச்சிவாயா…’ எனத் தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகரின் வரிகளுடன் வேத மந்திரமும் ராக் இசை வடிவில் கலந்து ஒரு ஃபியூஷன் பாடலாக உருவாகியிருக்கிறது.

‘புன்னகை ஒன்றுதான்…’ என்ற பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா நடித்து, நடனமும் ஆடியிருக்கிறார். இப்பாடல் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

‘நான் ஒரு காதல் ரோமியோ…’ என்ற துள்ளல் இசைப் பாடலில் பிரேம்ஜி, நடித்து நடனமாடியிருக்கிறார். அவருடன் ‘கலாபக் காதலன்’ படத்தின் ஹீரோயின் அக்‌ஷராவும் நடித்துள்ளார். ஒரு மும்பை மாடலும் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு பின்னி மில், சென்னையில் உள்ள பிரபல கிளப்பில் நடைபெற்றது.

அடுத்து போபோ சசி பாடி நடிக்கும் பாடல் படமாக்கப்பட உள்ளது. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க உள்ளார்.

எதற்காக இப்படி ஒரு இசை ஆல்பம் என்று டைரக்டர் மகேஷிடம் கேட்டபோது :

‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு, ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையா இருக்கும்.  இதுல எந்தக்கருத்தும் நான் சொல்லல. மகிழ்ச்சியோட இருக்கிற இளைஞர்களைப் பத்தின ஆல்பமா உருவாக்கியிருக்கோம்.

இது ஒரு சாதாரண மியூசிக் ஆல்பம் இல்லை. ஒரு படத்துல வர்ற பாடல் எப்படி ஹைலுக்கோட இருக்குமோ அதே லுக்கோட தான் பண்ணிருக்கோம்.

இந்த மாதிரி தனி இசை ஆல்பத்துக்கு தமிழில் வரவேற்பு கெடைக்கணும், அதுக்காகத்தான் இந்த ஆல்பத்தை தயாரிச்சேன். என்றவர் இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களை தமிழ் தொலைக்காட்சிகளிலும், எப்.எம் ரேடியோக்களிலும் ஒளி, ஒலிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்.

வருகிற மே மாதம் இந்த ஆல்பம் வெளியிடப்பட உள்ளது.
 
Top