கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் 55-வது படத்தின் துவக்க விழா இன்று 9-ஆம் தேதி துவங்கியது.
ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சின தினங்களுக்கு முன்பு தான் மீடியாக்களுக்கு செய்தியாக அனுப்பப்பட்டது.

படத்தில் அஜித் டபுள் ஹீரோ கெட்டப்பை போடுகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோயினும் உண்டு. அனேகமாக அது த்ரிஷாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

இப்படத்துக்காக அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு குட்பை சொல்லி விட்டார். அது போக ஜிம்முக்குச் சென்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இப்படித்தான் அஜித்தின் படச்செய்திகள் ரகசிய தகவல்களாக அவ்வப்போது வெளியாகி வருகிறது.

‘ஆரம்பம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இதன் துவக்க விழா இன்று காலை சென்னை வளசரவாக்கத்தில் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்தின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலில் ஆரம்பமானது.

படப்பூஜையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அவரது மகனும் டைரக்டருமான ஜோதி கிருஷ்ணா, படத்தின் டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மட்டுமே கேமரா யூனிட்டுடன் ஆஜராகியிருந்தனர்.

பட பூஜைக்கு அஜித் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் கலந்து கொள்ளவில்லை. வருகிற 11- ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதில் அஜித் கலந்து கொள்வார் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் படத்துக்கு பூஜை போடுகிறார்கள் என்ற தகவல் தெரிந்ததும் கண்டிப்பாக அஜித் வருவார் என்கிற எதிர்பார்ப்பில் அக்கம் பக்கத்தில் உள்ள அவரது ரசிகர்கள் பூஜை நடந்த கோவிலுக்கு படையெடுத்தனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
 
Top