ரிலீசுக்கு முன்பே ‘மான் கராத்தே’ படத்தின் வசூல் 40 கோடியை தாண்டியிருக்கிறது. இந்த மகத்தான சாதனையால் முதன்முறையாக மாஸ் ஹீரோக்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான சிவகார்த்திகேயனை ‘மெரினா’ படத்தில் ஹீரோவாக்கினார் டைரக்டர் பாண்டிராஜ். முதல்படமே வசூலில் சைக்கை போடு போட தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர் நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட்டுகளை கொடுத்தார்.

இதனால் கோடம்பாக்கத்தில் அவர் ஒரு கவனிக்கத்தக்க ஹீரோவானார்.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மான் கராத்தே’ படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. தொடர் ஹிட்டுகளை கொடுத்து வரும் ஹீரோ என்பதால் ‘மான் கராத்தே’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் தியேட்டர்கள் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மத்தியிலும் கூட மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதுவரை கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிக தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் இந்த ‘மான் கராத்தே’ படமும் இதுவரை இல்லாத வகையில் சுமார் 675 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. இதில் தமிழகத்தில் மட்டுமே 280 தியேட்டர்களாம்.

படம் ரிலீசுக்கு முன்பே தியேட்டர்கள் சைடிலிருந்து 26 கோடி ரூபாய், சாட்டிலைட் ரைட்ஸ் 9 கோடி ரூபாய், ஃபாரீன் ரைட்ஸ் 5 கோடி ரூபாய் என படத்துக்கு செலவான தொகையையும் தாண்டி ஒன்றரை மடங்கு லாபத்தையும் சம்பாதித்து விட்டது ‘மான் கராத்தே’.

மேலும் சென்னை உட்பட தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் நேற்று ரிசர்வேஷன் ஆரம்பிக்கப்பட்டது. ரிசர்வேஷன் ஆரம்பிக்கப்பட்ட அரைமணி நேரத்திற்குள் ட்ரெயின் டிக்கெட்டைப் போல தொடர்ந்து 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து எல்லாத் தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டது.

மொத்தத்துல சிவகார்த்திகேயன் காட்டுல தான் அடைமழை பெய்யுது போல…
 
Top